விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 30). இவா் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் ஏழுமலை மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மணிகண்டன்(27). வீரப்பன்(35) ஆகியோரது கூரை வீடுகளுக்கும் தீ பரவி பற்றி எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, நகை-பணம், ஆவணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் மற்றும் ஆலடி ஊராட்சி மன்றத் தலைவர் பீயுலா ஜெயக்குமார் ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆலடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.