கடலூர் மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிக்கூடங்களை திறக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட அலுவலர்கள் (வடலூர்) செல்வராஜ், (சிதம்பரம்) திருமுருகன், (விருத்தாசலம்) சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி கூறுகையில், மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் திறந்ததும், அனைத்து பள்ளி ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பள்ளி வளாகத்தில் தினசரி தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கிருமி நாசினியும் தெளிக்கப்பட வேண்டும்.வகுப்பறைகள், இருக்கைகள் மற்றும் தரைதளம் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்றும், கிருமி நாசினி அல்லது சோப்பு போதுமான அளவில் இருப்பில் உள்ளதா? என்றும் தினசரி பார்வையிட வேண்டும். மேலும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவதையும், பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளும் கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். மேலும் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். அதனால் முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.